சிஎஸ்கேவில் இந்த 3 வீரர்களை தக்கவைக்க வேண்டும் - ஷான் பொல்லாக்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த 14ஆவது ஐபிஎல் தொடரில் சென்னை அணி 4ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இதை தொடர்ந்து அடுத்த வருடம் 15ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் விளையாட இருப்பதால் அந்த தொடருக்கு முன் அணிகள் கலைக்கப்பட்டு வீரர்கள் மெகா ஏலத்தில் விடப்பட இருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி ஒரு அணியில் மூன்று வீரர்கள் மட்டுமே தக்க வைக்கமுடியும் என்ற நிலையும் ஏற்படலாம். இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்க வைக்கப் படவேண்டிய வீரர்கள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது/
இந்நிலையில் சிஎஸ்கே அணியில் எந்த 3 வீரரை தக்க வைக்கலாம் என்பது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான ஷான் பொல்லாக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்திய வீரர்களில் ருதுராஜ் கெய்க்வாட்டை முதல் நபராக நான் தக்க வைப்பேன். ஏனெனில் நிச்சயம் அவர் ஒரு சிறப்பான தொடக்க ஆட்டக்காரர். அவரால் இன்னும் பல ஆண்டுகள் சென்னை அணிக்காக அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.
இதன் காரணமாக எதிர்கால சிஎஸ்கே அணியை கணக்கில் கொண்டு நான் முதல் நபராக அவரை தக்க வைப்பேன். அதற்கடுத்து வெளிநாட்டு வீரர்களில் டூ பிளெசிஸை தக்கவைக்கலாம் ஏனெனில் அவராலும் இன்னும் சில ஆண்டுகள் சென்னை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் எனவே அவரை தக்கவைக்கலாம்.
மூன்றாவதாக ஜடேஜாவை தக்கவைக்கலாம். ஏனெனில் ஜடேஜா பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து வகையிலும் அசத்த கூடியவர். இதன் காரணமாக இவர்கள் மூவரையே சிஎஸ்கே அணி தக்க வைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
மேலும் தோனி குறித்து குறிப்பிட்ட அவர், “நான் என்னுடைய தனிப்பட்ட முறையில் சொல்கிறேன் அடுத்த ஆண்டு தோனி விளையாடுவதை பார்ப்போமா ? என்று தெரியாது. ஆனால் அவர் சென்னை அணிக்காக ஒரு முக்கிய பொறுப்பில் இருப்பார் என்றே தோன்றுகிறது. எனவே தோனியை தவிர்த்து இவர்கள் மூவரையும் தக்க வைக்கலாம்” என்று கூறியுள்ளார்.