தனி ஒருவனாக இந்திய அணியை வெற்றிபெற செய்த தீபக் சஹார்; இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதபடி களமிறங்கிய இலங்கை அணிக்கு அவிஷ்கா ஃபெர்னாண்டோ அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தார். பின்னர் 50 ரன்களில் ஃபெர்னாண்டோ ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய சரித் அசலங்கா - கருணரத்னே இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்களை எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக அசலங்கா 65 ரன்களையும், கருணரத்னே 44 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் யுஸ்வேந்திர சஹால், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி கார்த்திருந்தது. அதிரடி வீரர்கள் பிரித்வி ஷா, இஷான் கிஷான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
அவர்களைத் தொடர்ந்து ஷிகர் தவான் (29), மனீஷ் பாண்டே (37) அகியோர் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார்.
பின்னர் அவரும் 53 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியாவும் டக் அவுட்டாகி பெவிலியனுக்குச் சென்றார். இதையடுத்து ஜோடி சேர்ந்த குர்னால் பாண்டியா - தீபக் சஹார் இணை இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது.
இதில் குர்னால் 35 ரன்கலுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த தீபக் சஹார் அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் சஹாருடன் ஜோடி சேர்ந்த புவனேஷ்வர் குமார் நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இதன்மூலம் கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணி வெற்றிபெற 15 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. பரபரப்பான ஆட்டத்தில் தீபக் சஹார் அதிரடியாக விளையாடி 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இதன்மூலம் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 69 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த தீபக் சஹார் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.