தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்தும் விலகும் சூர்யகுமார் யாதவ்?
ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.
தொடர்ச்சியாக 2 வெற்றிகளை பெற்ற அந்த அணி நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக மீண்டும் தோல்வியடைந்தது. இதற்கு முக்கிய காரணம் அணியின் மிடில் ஆர்டர் தூண் சூர்யகுமார் யாதவ் இல்லாதது தான். குஜராத் அணியுடனான போட்டியின் போது சூர்யகுமாருக்கு இடதுகையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
அணிக்குள் இருந்தே சிகிச்சைப் பெற்ற பின்னர் விளையாடாமல் தொடரில் இருந்தே விலகியதற்கு மற்றொரு காரணமும் வெளியானது. அதாவது ஐபிஎல் முடிந்தவுடன் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இதற்கு தற்போது இருந்து ஓய்வெடுத்தால் நிச்சயம் அணியில் இடம்பெற்றுவிடலாம் என திட்டமிடப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் அது தற்போது நிறைவேறாது எனத்தெரிகிறது. சூர்யகுமார் யாதவின் காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதாகவும், இதனால் அவர் தென்னாப்பிரிக்க தொடரிலும் பங்கேற்பது சிரமம் தான் என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், சூர்யகுமாருக்கு நீண்ட ஓய்வு தேவைப்படலாம். அணித்தேர்வுக்கு அவர் பங்கேற்கலாம். ஆனால் அவரை பிசிசிஐ அவசரப்படுத்தாது எனக்கூறியுள்ளார்.
சூர்யகுமார் யாதவுக்கு ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வலதுகையில் காயம் ஏற்பட்டது. இதனால் தாமதாக தான் ஐபிஎல்-க்கு வந்தார். இப்படி இருக்கையில் தற்போது இடது கையிலும் காயம் ஏற்பட்டுள்ளதால், டி20 உலகக்கோப்பைக்கு அவர் தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பு பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.