ஐபிஎல் 2022: நடராஜனை புகழும் சாம் கரண்!

Updated: Thu, Apr 07 2022 13:27 IST
Image Source: Google

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான முதல் வாரத்தை கடந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கிய இந்த தொடரில் முதலில் நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு டாப் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

இந்த தொடரில் முதல் வாரத்தில் ராஜஸ்தான், கொல்கத்தா, பஞ்சாப் போன்ற அணிகள் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே வெற்றிநடை போட தொடங்கியுள்ளன. அதே சமயம் சென்னை, மும்பை உள்ளிட்ட வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றன.

அந்த வரிசையில் நியூசிலாந்தின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் தலைமையில் விளையாடி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் அடுத்தடுத்து படு தோல்விகளை சந்தித்து இந்த வருட ஐபிஎல் தொடரை தோல்வியுடன் துவக்கியது. அதிலும் பெரிய தோல்விகளை பெற்றதால் தற்போது புள்ளிப் பட்டியலில் கடைசி இடமான 10-வது இடத்தில் திண்டாடும் அந்த அணி இதிலிருந்து மீண்டெழுந்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றால் போதும் என அந்த அணியின் ரசிகர்கள் கருதுகின்றனர்.

இப்படி அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு கிடக்கும் ஹைதராபாத் அணிக்கு அதில் விளையாடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் மிகப் பெரிய ஆறுதலாக இருந்து வருகிறார். ஏனெனில் இந்த சீசனில் அபாரமாக செயல்பட்டு வரும் அவர் லக்னோவுக்கு எதிரான போட்டியில் தனது பிறந்த நாளன்று 26 ரன்கள் மட்டும் கொடுத்து கேஎல் ராகுல், க்ருனால் பாண்டியா ஆகியோரின் 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார்.

ஆரம்ப காலகட்டங்களில் டிஎன்பிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழ்நாடுக்காக விளையாடத் தொடங்கிய அவர் தனது அபார திறமையால் ஐபிஎல் தொடரில் கால்தடம் பதித்தார். அதிலும் கடந்த 2020 ஐபிஎல் தொடரில் கடைசி கட்ட ஓவர்களின் 6 பந்துகளையும் 6 யார்கர்களாக வீசி எதிரணிகளை அச்சுறுத்திய அவர் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன் காரணமாக “தமிழ்நாட்டின் யார்கர் கிங்” என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவர் அந்த வருட இறுதியில் இந்திய அணியில் ஒரு நெட் பந்துவீச்சாளராக விளையாடும் வாய்ப்பு பெற்றார். 

அந்த சமயத்தில் ஒரு சில முக்கிய வீரர்கள் காயமடைந்த காரணத்தால் இந்திய அணிக்காக விளையாடும் பொன்னான வாய்ப்பைப் பெற்றார். கடந்த 2020 டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரில் அறிமுகமான அவர் அதில் அபாரமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றியில் முக்கியப் பங்காற்றினார். 

அதன் காரணமாக அதே சுற்றுப்பயணத்தில் நடந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியிலும் விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் அதிலும் அசத்தி இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக விளையாடி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். அந்த தருணத்தில் காயமடைந்த அவர் தற்போது மீண்டும் ஐபிஎல் தொடரில் தமக்கே உரித்தான யார்க்கர் பந்துகளை பிரயோகம் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழக வீரர் நடராஜன் 6 பந்துகளிலும் 6 அபாரமான யார்கர்களை வீசும் வல்லமை படைத்தவர் என இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் ஆல்ரவுண்டர் சாம் கரன் வியந்து பாராட்டியுள்ளார். 

இதுபற்றி பேசிய அவர் “அவருக்கு எதிராக கடந்த வருடம் புனேவில் நான் விளையாடினேன். அன்றைய நாளில் அவரை நான் எதிர்கொண்ட போது அவர் 13 ரன்களை அடிக்க விடாமல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தினார். அவரின் யார்க்கர் பந்துகளை எதிர்கொண்ட அனுபவம் எனக்கு உள்ளது. அவர் ஓவரின் 6 பந்துகளையும் யார்கர்களாக வீசும் நுணுக்கம் நிறைந்த பவுலர்.

அவரை போன்ற ஒருவர் தங்கள் அணியில் இருக்க வேண்டுமென அனைத்து அணிகளும் விரும்பும். மேலும் இடது கை பவுலராக இருக்கும் அவரிடம் தேவையான அளவு ஸ்விங் செய்யும் திறமையும் உள்ளது. பாண்டியாவுக்கு எதிராக அவர் வீசிய பந்து (லக்னோவுக்கு எதிரான போட்டியில்) லெக் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. அவரைப் போன்ற ஒரு நல்ல பவுலர் உடல் தகுதியுடன் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது” என கூறினார்.

கடந்த 2020, 2021 ஆகிய வருடங்களில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய சாம் கரண் கடந்த வருடம் ஏற்பட்ட காயத்தால் ஐபிஎல், டி20 உலகக்கோப்பை உள்ளிட்ட முக்கிய தொடர்களில் இருந்து விலகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை