பவுண்டரில் எல்லையில் அபாரமான கேட்சைப் பிடித்த சாம் கரண் - காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுக வீரர் டெவால்ட் பிரீவிஸ் அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 42 ரன்களிலும், ஆயூஷ் மாத்ரே 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களையும், தீபக் ஹூடா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் சிஎஸ்கே அணி 19.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இஷான் கிஷான் 44 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கமிந்து மெண்டிஸ் 32 ரன்களையும், நிதீஷ் ரெட்டி 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பிலும் நீடித்து வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாம் கரண் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, இன்னிங்ஸின் 12ஆவது ஓவரை நூர் அஹ்மத் வீசிய நிலையில் ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட இஷான் கிஷன டீப் மிட் விக்கெட் திசையில் சிக்ஸர் அடித்து அசத்தினார். பின்னர் கடைசி பந்தையும் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்த இஷான் மீண்டும் டிப் விக்கெட் திசையை நோக்கி தூக்கி அடித்தார்.
Also Read: LIVE Cricket Score
ஆனால் பந்து அவர் எதிர்பார்த்த லெந்தில் இல்லாத காரணத்தால் அது ஃபிளாட்டாக பவுண்டரி எல்லையை நோக்கி சென்றது. அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த சாம் கரண் தாவி பந்தை பிடித்து இஷான் கிஷானை ஆட்டமிழக்க செய்தார். இதனால் அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். இந்நிலையில் சாம் கரண் பிடித்த இந்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.