ஐபிஎல் 2022: நடராஜனை பாராட்டும் சுனில் கவாஸ்கர்!

Updated: Mon, Apr 25 2022 11:46 IST
Image Source: Google

தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஏமாற்றம் நிறைந்ததாக அமைந்தது. முழங்கால் காயம், அதைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை, இதற்குப் பின் கொரோனா என அடுத்தடுத்து உடல்ரீதியான பிரச்னைகளால் அவதிப்பட்டார் நடராஜன். இதனால், கடந்த ஐபிஎல்லில் 2 ஆட்டங்களில் மட்டுமே நடராஜனால் ஆட முடிந்தது. இதைத்தொடர்ந்து தீவிர பயிற்சிகளுக்கு பின் தன்னை தயார்படுத்திக் கொண்ட 31 வயதான நடராஜன் தற்போதைய ஐபிஎல் களத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அசத்தி வருகிறார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜனின் துல்லிய யார்க்கர் தாக்குதல்கள் எதிராளிகளுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்து வருகின்றன. கடந்த சனிக்கிழமையன்று நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ஓவர்கள் மட்டுமே வீசிய நடராஜன் 10 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். இதன் மூலம் கடந்த 7 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

நடராஜன் மனம் தளர வைக்கும் சோதனைகளில் இருந்து மீண்டு, சாதித்து வருவது இந்த ஐபிஎல்லின் பேசுபொருள்களில் ஒன்றாக மாறியுள்ளது.  நடராஜனின் இந்த சிறப்பான பந்துவீச்சு இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ள 20 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியில் இடம் பெற்றுத் தரும் என நம்பலாம்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், டி.நடராஜனை பாராட்டியுள்ளார். இதுபற்றி கவாஸ்கர் கூறுகையில், ''யார்க்கர்கள் வீசுவதில் நடராஜன் சிறந்தவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம், அவரைத் திரும்பிப் பார்ப்பது நல்லது. ஏனென்றால் சில நேரம் இந்திய கிரிக்கெட் அவரை இழந்தது போல் இருந்தது. அவரை மீண்டும் அணியில் சேர்ப்பது நல்லது. 

16ஆவது ஓவர் முதல் 20ஆவது ஓவருக்கு இடையில் அவரது பந்துவீச்சு பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.  கடந்த ஆண்டு நடராஜன் சரியாக விளையாடவில்லை என்றாலும் தற்போது அவர் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார். அவருக்கு காயங்கள் இருந்தன. இப்போது அவர் புதியவராகவும், ஆடத் தயாராகவும் இருக்கிறார்'' என்று கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை