டான் பிராட்மேன், சுனில் கவாஸ்கர் சாதனையை சமன்செய்த ஷுப்மன் கில்!
Shubman Gill Record: மான்செஸ்டரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சதமடித்த இந்திய வீரர் எனும் பெருமையை ஷுப்மன் கில் பெற்றுள்ளார்
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன் பின் இணைந்த கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் இணை சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் கேஎல் ராகுல் 90 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதமடித்து அசத்திய ஷுப்மன் கில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தனார். பின்னர் இணைந்த ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் ஷுப்மன் கில் சதமடித்ததன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அந்தவகையில் மான்செஸ்டரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சதமடித்த இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு முன்னாள் ஜாமப்வான் சச்சின் டெண்டுல்கர் 1990 இல் மான்செஸ்டர் மைதானத்தில் சதமடித்திருந்த நிலையில், தற்சமயம் ஷுப்மன் கில் சதத்தைப் பதிவுசெய்துள்ளார்.
டான் பிராட்மேனை சமன் செய்தார்
இதுதவிர்த்து 148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு டெஸ்ட் தொடரில் நான்கு சதங்களை அடித்த மூன்றாவது கேப்டன் எனும் பெருமையையும் ஷுப்மன் கில் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் டான் பிராட்மேன் கடந்த 1947ஆம் ஆண்டும், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் 1978ஆம் அண்டும் ஒரே டெஸ்ட் தொடரில் 4 சதங்களை விளாசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு டெஸ்ட் தொடரில் கேப்டனாக அதிக சதங்கள்
- 4* - ஷுப்மான் கில் vs இங்கிலாந்து, 2025
- 4 - டான் பிராட்மேன் vs இந்தியா, 1947/48
- 4 - சுனில் கவாஸ்கர் vs மேற்கு இந்திய, 1978/79
மூன்றாவது இந்திய வீரர்
மேற்கொண்டு ஒரு டெஸ்ட் தொடரில் நான்கு சதங்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் ஷுப்மன் கில் பெற்றுள்ளார். இதற்கு முன்பு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இரண்டு முறையும், முன்னாள் கேப்டன் விராட் கோலி ஒரு முறையும் என ஒரு டெஸ்ட் தொடரில் 4 சதங்களைப் பதிவுசெய்து சாதனைப் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஷுப்மன் கில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் இந்த தொடரில் 8 இன்னிங்ஸில் விளையாடி 4 சதங்களுடன் 722 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதற்கு முன் இந்திய அணி தொடக்க வீரார் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த 2024ஆம் ஆண்டு இங்கிலாதுக்கு எதிராக 9 இன்னிங்ஸ்களில் 712 ரன்களை அடித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள்
- 722* - ஷுப்மான் கில், 8 இன்னிங்ஸ், 2025
- 712 - யஷஸ்வி ஜெய்ஸ்வால், 9 இன்னிங்ஸ், 2024
- 655 - விராட் கோலி, 8 இன்னிங்ஸ், 2016
- 602 - ராகுல் டிராவிட், 8 இன்னிங்ஸ், 2002
- 593 - விராட் கோலி, 10 இன்னிங்ஸ், 2018
- 586 - விஜய் மஞ்ச்ரேக்கர், 8 இன்னிங்ஸ், 1961