டி20 உலகக்கோப்பை: நாடு திரும்பும் இந்திய வீரர்கள்!
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக அவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல், மெரிவாலா, கரண் சர்மா, ஷாபாஸ் அகமது, கிருஷ்ணப்பா கெளதம், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் இந்திய அணியின் வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளர்களாகத் தேர்வானார்கள்.
ஐபிஎல் போட்டியில் விளையாடிய இவர்கள் நாடு திரும்பாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கி, இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் இந்தியாவில் சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி நவம்பர் 4 அன்று தொடங்கி நவம்பர் 22-ல் நிறைவுபெறுகிறது.
இதன் காரணமாக வலைப்பயிற்சி வீரர்களாகத் தேர்வான கரண் சர்மா, ஷாபாஸ் அகமது, கே. கெளதம், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் இந்தியாவுக்குத் திரும்பும்படி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இதன்படி நால்வரும் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார்கள்.
டி20 உலகக் கோப்பைப் போட்டி தொடங்கிய பிறகு வலைப்பயிற்சியில் நீண்ட நேரம் வீரர்கள் ஈடுபட மாட்டார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் இந்தியாவுக்குத் திரும்பினால் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் விளையாட முடியும் என தேர்வுக்குழுவினர் கருதினார்கள்.
அவர்களால் டி20 ஆட்டங்களிலும் விளையாடி பயிற்சி பெற முடியும். மேலும் வெயில் அதிகமாக உள்ளதால் வலைப்பயிற்சிக்கு அதிக அளவிலான சுழற்பந்துவீச்சாளர்கள் தேவைப்பட மாட்டார்கள் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேட்டியளித்துள்ளார்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
அவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல், மெரிவாலா ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து தங்கி இந்திய அணியினரின் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.