ஐபிஎல் 2022: உம்ரான் மாலிக்கை புகழ்ந்த அஸி., ஜாம்பவான்!
ஐபிஎல் எனும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008ஆம் தொடங்கி, தற்போது உலகின் முன்னணி டி20 தொடர்களில் ஒன்றாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவரை 14 சீசன்களைக் கடந்த இத்தொடர் நேற்றுடன் தனது 15ஆவது சீசனையும் வெற்றிகரமாக கடந்தது.
இந்தியாவின் மூலை முடிக்கில் இருக்கும் இளம் வீரர்களுக்கு தேவையான வாய்ப்பை அளித்து அவர்களை பட்டை தீட்டி உலகத்தரம் வாய்ந்த வீரராக ஜொலிக்க வைக்கும் நோக்கத்திலேயே இந்த தொடர் துவங்கப்பட்டது. அந்த வகையில் இந்த வருட ஐபிஎல் தொடரிலும் திலக் வர்மா, முகேஷ் சவுத்ரி போன்ற நிறைய தரமான இளம் வீரர்களும் அடையாளம் காணப்பட்டார்கள்.
அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய உம்ரான் மாலிக் உச்சகட்ட அடையாளமாக ஜொலித்தார் என்றே கூறலாம். தற்போது 22 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவர் கடந்த 2021 இல் முதல் முறையாக ஒருசில போட்டிகளில் விளையாடினாலும் 140 கி.மீ வேகப்பந்துகளை அசால்டாக வீசி அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி போன்றவர்களின் பாராட்டுகளை அள்ளினார்.
அதன் காரணமாக யோசனையின்றி 4 கோடி என்ற பெரிய தொகைக்கு ஹதராபாத் நிர்வாகம் அவரை ஏலத்திற்கு முன்னரே தக்கவைத்த நிலையில் இந்த வருடம் 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை எடுத்த அவர் முடிந்த அளவுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டுள்ளார்.
அதிலும் தொடர்ச்சியாக 150 கி.மீ வேகத்தில் அசால்ட்டாக பந்துவீசிய அவர் டெல்லிக்கு எதிரான போட்டியில் 157.0 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வரலாற்றில் அதிவேகமாக பந்தை வீசிய பவுலராக சரித்திர சாதனை படைத்தார்.
இப்படி இந்திய மண்ணிலேயே இவ்வளவு வேகத்தில் வீசுகிறார் என்றால் வேகத்திற்கு கை கொடுக்க கூடிய ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலக கோப்பையில் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்ற நோக்கத்தில் அவரை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் அத்துடன் பாகிஸ்தான் நட்சத்திரம் சோயப் அக்தர் தனது 161.3 கி.மீ வேகப்பந்து சாதனையை உடைத்து உம்ரான் மாலிக் புதிய சாதனை படைத்தால் தமக்கு மிகவும் மகிழ்ச்சி என்று வெளிப்படையாக பாராட்டினார்.
அதிலும் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் பிரெட் லீ, “சில கண்ணியமான பந்துகளை வீசிய பலர் உள்ளனர், ஆனால் உம்ரான் மாலிக்கால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அவர் ஒரு சிறந்த கண்டுபிடிப்பு என்று நான் நினைக்கிறேன், ஒரு இளைஞன் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்துவீசமுடியும் என்றால், அவர் மிகவும் ஈர்க்கக்கூடியவர். மேலும், அவர் விரைவாகச் செல்ல முடியும் என்று நான் இன்னும் நம்புகிறேன், இது என்னைப் போன்றவர்களுக்கு மட்டுமல்ல, தோழர்கள் வேகமாக பந்து வீசுவதைப் பார்க்க விரும்பும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும் உற்சாகமாக இருக்கிறது, நிச்சயமாக இந்திய கிரிக்கெட்டுக்கு” என்று புகழ்ந்து கூறியுள்ளார்.
இருப்பினும் வேகத்திற்கு ஈடான ரன்களை வாரி வழங்கிய அவர் அதற்காக விமர்சனங்களையும் சந்தித்தார். ஆனாலும் அவ்வளவு வேகத்தில் பந்துவீசும் ஒரு பவுலர் இந்திய அணியில் இல்லாத காரணத்தால் வரும் ஜூன் 9 – 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் முதல் முறையாக அவரை தேர்வு குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.
இந்நிலைமையில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் 2022 தொடரின் வளர்ந்து வரும் இளம் வீரர் என்ற விருதை உம்ரான் மாலிக் வென்று சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் சிறந்து விளங்கும் இளம் வீரர்களை பாராட்டும் வகையில் ஒவ்வொரு வருடமும் பிசிசிஐ வளர்ந்து வரும் வீரர் என்ற விருதை வழங்கி வருகிறது. அந்த விருதை ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அடங்கிய ஜாம்பவான்கள் தேர்வு செய்வார்கள்.
அந்த விருதுக்கான பரிந்துரை பட்டியலில் உம்ரான் மாலிக் உடன் இந்த வருடம் மும்பை அணிக்காக 397 ரன்களை எடுத்த 19 வயது இளம் வீரர் திலக் வர்மா, அதே மும்பை அணிக்காக விளையாடி 7 போட்டிகளில் 161 ரன்கள் எடுத்த தென்ஆப்பிரிக்கா இளம் புயல் டெவால்டு ப்ரேவிஸ், சென்னை அணிக்காக 16 விக்கெட்டுகள் எடுத்த முகேஷ் சவுத்ரி மற்றும் 13 விக்கெட்டுகளை எடுத்த இலங்கை இளம் வீரர் மகேஷ் தீக்சனா ஆகிய 5 வீரர்கள் போட்டியிட்டனர்.
இந்த வருடம் ஹைதராபாத் அணி பங்கேற்ற 14 போட்டிகளில் இதர பவுலர்களை காட்டிலும் தொடர்ச்சியாக அதிவேகமான பந்தை வீசிய அவர் அதற்காக வழங்கப்படும் விருதை வென்று 14 லட்சங்களை அள்ளினார். அப்படி இந்த வருடம் முழுவதும் அதிவேகமான மின்னல்வேக பந்துகளை வீசி ரசிகர்களையும் வர்ணனையாளர் ஜாம்பவான்களின் கவர்ந்த உம்ரான் மாலிக் 22% ஓட்டுகளை வென்று ஐபிஎல் 2022 தொடரின் சிறந்த வளர்ந்து வரும் வீரர் என்ற விருதை வென்று சாதனை படைத்தார்.
ஐபிஎல் வரலாற்றில் இந்த விருதை வெல்லும் 3ஆவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் (2016), பசில் தம்பி (2017) ஆகியோர் மட்டுமே பெற்றுள்ளார்.
ஏற்கனவே பல ரசிகர்கள் மற்றும் ஜாம்பவான்களின் பாராட்டை பெற்று அசத்தி வரும் உம்ரான் மாலிக் தற்போது ஐபிஎல் 2022 தொடரின் இளம் வீரருக்கு வழங்கப்படும் உச்சபட்ச கௌரவமான வளர்ந்து வரும் சூப்பர் ஸ்டார் வீரர் விருதையும் வென்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஒரு சிறிய நகரில் பழக்கடை வியாபாரியின் மகனாக பிறந்து கடினமாக உழைத்து இவ்வளவு உயரத்தை எட்டியுள்ள உம்ரான் மாலிக் இதேபோல் நிச்சயம் சிறப்பாக செயல்பட்டு வரும் காலங்களில் இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு சாதிப்பார் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.