உம்ரான் மாலிக் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த டேல் ஸ்டெயின்!

Updated: Mon, Mar 17 2025 21:33 IST
Image Source: Google

இந்திய அணியின் அதிவேக  பந்துவீச்சாளராக அறியப்பட்டவர் உம்ரான் மாலிக். ஜம்மூ-காஷ்மீரைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான இவர், தனது அபார வேகம் மற்றும் விக்கெட்டை வீழ்த்தும் யார்க்கர்களுக்காக ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று இந்திய அணியிலும் இடம்பிடித்திருந்தார். 

மேற்கொண்டு அவர் சர்வதேச கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் இந்திய அணிக்காக இதுவரை 18 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளையும், ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் 26 போட்டிகளில் 29 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இருப்பினும் கடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்படாத காரணத்தால் ஏலத்திற்கு முன்னரே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உம்ரான் மாலிக்கை விடுவித்தது. 

அதன்பின் வீரர்கள் மெகா ஏலத்தில் உம்ரான் மாலிக்கை அவரின் அடிப்படை தொகையான ரூ.75 லட்சத்திற்கு கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்திருந்தது. இதனால் இந்த ஐபிஎல் தொடரில் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்த நிலையில், காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகியுள்ளது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையிலும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடரில்ன் போது சன்ரைசர்ஸ் அணிக்காக உம்ரான் மாலிக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த சீசனில், அவர் தனது 150+ கிமீ/மணி வேகத்தில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் அவரை ‘ஃபெராரி’ என்று அழைத்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் உம்ரான் மாலிக் குறித்து டேல் ஸ்டெயின் கூறிய கருத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து பேசிய அவர், "நான் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக இருந்த போது, உம்ரான் மாலிக்கிடம் மெதுவான பந்துகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று கூறினேன். ஏனெனில் அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தனது 4 ஓவர்களில் குறைந்தது 12 பந்துகளை ஸ்லோவராக வீசினார்.

ஆனால் உம்ரான் மாலிக் நான்கு ஓவர்களில் ஒரே ஒரு ஸ்லோவர் பந்தை மட்டுமே பயன்படுதினார். நான் அவரை ஓவருக்கு இரண்டு ஸ்லோயர் பந்துகளை வீசும் படி கூறினேன். அதற்கு அவரும் புவனேஷ்வர் குமார் போல் நானும் ஸ்லோவர் பந்துகளை வீசுகிறேன் என்று என்னிடம் கூறினார். ஆனால் அவருக்கான வாய்ப்பு கிடைத்தபோது அவர் 155 கி.மீ வேகத்தில் யார்க்கரை வீசியதுடன் ஸ்டம்புகளையும் தகர்த்தார். 

Also Read: Funding To Save Test Cricket

நான் அவரை மெதுவாக பந்து வீசச் சொன்னேன், ஆனால் அவர் தனது சக்தியைப் பயன்படுத்தி அற்புதமான யார்க்கரை வீசினார். அதுதான் உம்ரான் மாலிக்கின் சிறப்பு. ஆனாலும் நீங்கள் 160 கிமீ/மணி வேகத்தில் பந்து வீசினாலும் அது அணியின் திட்டத்திற்கு எதிராக இருந்தால், நீங்கள் 60-70 ரன்கள் கொடுக்க வேண்டி இருக்கும். அப்படியானால், இது அணிக்கும் உங்களுக்கும் நல்லதல்ல. இருப்பினும் உம்ரான் அணியின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, தனது வேகத்தில் புத்திசாலித்தனமாக இருந்தால், அவர் மீண்டும் கிரிக்கெட் களத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை