எங்களுடைய ஆட்டம் எனக்கு திருப்தியளிக்கிறது - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!

Updated: Wed, Sep 06 2023 15:45 IST
Image Source: Google

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆறாவது போட்டி நேற்று லாகூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின.

அதன்படி இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்தது. இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 92 ரன்களை குவித்து அசத்தினார். இதன் காரணமாக 292 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆஃப்கானிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. மிகப்பெரிய இலக்கான இதனை ஆஃப்கானிஸ்தான அணி விரட்டாது என்றே பலரும் நினைத்த வேளையில் 37.1 ஓவரில் 292 ரன்கள் அடித்தால் அடுத்த சுற்றுக்கு செல்லலாம் என்கிற கட்டாயத்துடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான அணி துவக்கத்திலிருந்து அதிரடி காண்பித்தது.

ஒரு கட்டத்தில் வெற்றியை நோக்கி அருகில் சென்ற அவர்கள் கடைசி நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 37.4 ஓர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் குவித்து வெறும் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர். ஆஃப்கானிஸ்தான் அணியின் இந்த அசத்தலான ஆட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. என்னதான் அவர்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் அவர்களது இந்த முயற்சி அனைவரது மத்தியிலும் வாழ்த்துக்களையும் பெற்றுள்ளது. 

இந்நிலையில், தோல்வி குறித்து பேசிய ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஷாஹிதி, “இந்த தோல்வி எங்களுக்கு வருத்தமாக தான் இருக்கிறது. ஆனாலும் நாங்கள் இறுதிவரை போராடிய விதம் எங்களுடைய நூறு சதவீத பங்களிப்பையும் வழங்கியதை நினைத்து பெருமை ஆக நினைக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் எங்களது வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் இதில் கிடைத்த பாடத்தின் மூலம் நிச்சயம் உலக கோப்பை தொடரில் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை