ஆசிய கோப்பையை எந்த அணி கைப்பற்றும் ? வாசிம் அக்ரம் பதில்!

Updated: Mon, Aug 28 2023 22:32 IST
Image Source: Google

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரானது வரும் 30 ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி பிற்பகல் 3 மணிக்கு முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியானது இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடக்கிறது.

இதுவரையில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்தியா 7 முறையும், இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளன. இந்த நிலையில், 16ஆவது ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இணைந்து நடத்துகின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதிலிருந்து உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடரை எந்த அணி கைப்பற்றும் என்பது குறித்து பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் டி20 போட்டிக்கு பழக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். ஆசிய கோப்பையை 50 ஓவர்கள் வடிவத்தில் நடத்துவது நல்லது. ஏனென்றால், அடுத்து 50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பை நடக்கிறது.

இது மிகவும் நீண்ட போட்டி. ஒரு அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைவது என்பது கடினமான ஒன்று. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்க போட்டிகளில் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும். மேலும் இது டி20 போட்டி கிடையாது. இதற்கு ஏற்ப உடல் தகுதியும், மனநிலையும் தேவை.

கடந்த 15ஆவது சீசனில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தான் இறுதிப் போட்டிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், இலங்கை தொடரை கைப்பற்றியது. அப்படியிருக்கும் போது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 3 அணிகளுமே ஆபத்தானவை தான். இதுவரையில் ஆசிய கோப்பையை இந்த 3 அணிகள் தான் வென்றுள்ளன.

இந்த 3 அணிகளுடன் மற்ற அணிகளும் போட்டியிடும். இந்த முறை இலங்கை சாம்பியன் பட்டத்தை வென்ற போது இந்தியா இறுதி போட்டிக்கு வரவில்லை. இலங்கை மற்றும் வங்கதேச அணியை இங்கு குறைத்து மதிப்பிட முடியாது. இது 2ஆவது பெரிய தொடராகும். ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாள் மற்றும் ஆப்கானிஸ்தான் என்று 6 நாடுகளும் தங்களது வீரர்களை காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். உலகக் கோப்பைக்கு முன்னதாக இது ஒரு ஆயத்த தொடராகும்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை