வெற்றியோ தோல்வியோ இறுதிவரை போராடனும் - ராகுல் டிராவிட்!

Updated: Wed, Jul 21 2021 13:59 IST
Image Source: Google

கொழும்பு நகரில் நேற்று நடந்த இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் குவித்தது. 276 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 5 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 7 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில 2-0 என்ற கணக்கில் வென்று ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. மேலும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமான தீபக் சஹர் 82 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். 

இந்த வெற்றி குறித்து இந்திய வீரர்களிடம் ட்ரெஸிங் ரூமில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய வீரர்களிடம் உற்சாகமாகப் பேசியுள்ளார். டிராவிட் பேசிய காணொளியை பிசிசிஐ தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.

அக்காணொளியில் டிராவிட் பேசியதாவது ''இலங்கை அணிக்கு எதிராக 2ஆவது ஒருநாள் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறோம். இந்தியா தோல்வி அடைந்திருந்தாலும் நான் கவலைப்பட்டிருக்கமாட்டேன். ஆனால், கடைசிவரை போராட வேண்டும் என்று எதிர்பார்த்தேன்.

 

அது கடைசியில் நடந்து வெற்றியாக அமைந்துவிட்டது. வெற்றி பெறாவிட்டாலும்கூட கடைசிவரை போராடுவது முக்கியம். சிறப்பாகச் செயல்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள். தனிப்பட்ட வீரர்களின் செயல்பாடுகளைக் குறிப்பிட்டுப் பேச இது உகந்த நேரமல்ல. நம்முடைய அணியின் கூட்டத்தில் அதுபற்றிப் பேசுவோம். அனைத்தையும் அலசி ஆராய்வோம்.

அதேசமயம் நாம் எதிரணியை மதிக்க வேண்டும். நான் ஏற்கெனவே கூறியதுபோல் இலங்கை அணி மீண்டு வந்துள்ளது. நாம் சாம்பியன்போல் திரும்பி வந்துள்ளோம். வெற்றிக்கான வழியைத் தேடியுள்ளோம். உங்களை நினைத்துப் பெருமையாக இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை