ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி, ஏடிகே மோகன் பாகனை எதிர்கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்து வீணாகின. இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி அமைந்தது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட எஃப்சி கோவா அணிக்கு ஆட்டத்தின் 50ஆவது நிமிடத்தில் தோஹ்லிங் கோலடித்து அணியை முன்னிலைப் படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 70 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் ஃபரெஸ் அர்னாவுட் கோலடிக்க, ஆட்டத்தின் 82ஆவது நிமிடத்தில் நோஹா சதாவுலும் கோலடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
இதன்மூலம் ஆட்டநேர முடிவில் எஃப்சி கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஏடிகே மோகன் பாகனை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் எஃப்சி கோவா அணி 12 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தை பிடித்துள்ளது. அதேசமயம் ஏடிகே மோகன் பாகன் அணி 10 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.