
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்டர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி காயம் காரணமாக இப்போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதன் காரணமாக ஆல் ரவுண்டர் நாதன் ஸ்மித்திற்கு நியூசிலாந்து பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்திய அணியைப் பொறுத்தவரையில் எந்த மாற்றங்களும் இன்றி அதே பிளேயிங் லெவனுடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது.
முன்னதாக இவ்விரு அணிகளும் மோதிய லீக் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது. இதனால் இப்போட்டியிலும் இந்திய அணி தங்களது ஆதிக்கத்தை தொடர விரும்பும். அதேசமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் நியூசிலாந்து அணியும் இப்போட்டியை எதிர்கொள்ளும் என்பதால், இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
New Zealand Playing XI: வில் யங், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டாம் லேதம், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், கைல் ஜேமிசன், வில்லியம் ஓ ரூர்க்.
India Playing XI: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அக்ஸர் படேல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி.