இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமானது மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. அதன்படி இன்று தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்கம் கொடுத்தனர். இதில் ரோஹித் சர்மா 2 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விராட் கோலி, சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தானர். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 13 ரன்களில் நடையைக் கட்டிய நிலையில், அடுத்து வந்த கேல் ராகுல், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்த ரிஷப் பந்த்தும் 20 ரன்களுடன் நடையைக் கட்டிய நிலையில், ஜஸ்பிரித் பும்ராவும் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்தர். இறுதியில் ஜோடி சேர்ந்த குல்தீப் யாதவ் - முகமது சிராஜ் இணை ஓரளவுக்கு தாக்குப்பிடித்த நிலையில், குல்தீப் யாதவும் 2 ரன்னில் நடையைக் கட்டினார். இதனால் இந்திய அணி 46 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதேசமயம் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும், டிம் சௌதீ ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து நியூசிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.