
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கருண் நாயர் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியிலும் பென் டக்கெட் 43 ரன்களையும், ஸாக் கிரௌலி 64 ரன்களையும், ஹாரி புரூக் 53 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி 247 ரன்களில் ஆல் ஆவுட்டான நிலையில், முதல் இன்னிங்ஸில் 23 ரன்கள் மட்டுமே முன்னிலையும் பெற்றது.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், கேஎல் ராகுல் 7 ரன்களுக்கும், சாய் சுதர்ஷன் 11 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்த ஆகாஷ் தீப் சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்து அசத்தினார். இப்போட்டியில் அவர் 12 பவுண்டரிகளுடன் 66 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.