நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் நியூசிலாந்து அணியானது 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியதுடன் இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (நவம்பர் 1) மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான நியூசிலாந்து அணியில் மிட்செல் சான்ட்னர், டிம் சௌதீ நீக்கப்பட்டு இஷ் சோதி மற்றும் மேட் ஹென்றி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டு முகமது சிராஜ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியதுடன் தொடரையும் இழந்துள்ள இந்திய அணி, மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று ஒயிட்வாஷை தவிர்க்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
நியூசிலாந்து பிளேயிங் லெவன்: டாம் லாதம் (கே), டெவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல், கிளென் பிலிப்ஸ், இஷ் சோதி, மாட் ஹென்றி, அஜாஸ் பட்டேல், வில்லியம் ஓரூர்கே
இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், சர்ஃப்ராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.