இலங்கை அணி தற்சமயம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதனையடுத்து தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பாகிஸ்தான் அணி ஏற்கெனவே வெற்றி பெற்ற உத்வேகத்துடனும், இலங்கை அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முன்னைப்புடனும் இப்போட்டியை எதிர்கொள்ள இருக்கின்றன.
இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அந்தவகையில் இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.