ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் தொட்ரின் 18ஆவது சீசனில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரின் 19ஆவது சீசன் எதிர்வரும் 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணி வீரர்களுக்கான மினி ஏலம் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனால் ஐபிஎல் அணி நவம்பர் 15ஆம் தேதிக்கு முன்னதாக தாங்கள் தக்கவைத்த மற்றும் விடுவிடுத்த வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான வேலைகளில் ஐபிஎல் அணிகள் இறங்கியுள்ளன.
அதன் ஒருபகுதியாக, ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகளை வென்ற அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியானது ஷர்தூல் தாக்கூர் மற்றும் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் ஆகியோரை ஏலத்திற்கு முன்னதாக ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் ஷர்தூல் தாக்கூர் கடந்த சீசனுக்கான ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாமல் இருந்தார்.