தென் ஆப்பிரிக்க ஏ அணி தற்சமயம் இந்திய ஏ அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க ஏ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ருபின் ஹர்மான், ரிவால்டோ முன்சாமி, ஜோர்டன் ஹர்மான், கேப்டன் அக்கர்மேன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த டியான் ஃபோர்ரெஸ்டர் - டெலனோ போட்ஜீட்டர் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், இருவரும் தங்களின் அரைசதங்களையும் பதிவு செய்து அசத்தினார்.
இதில் போர்ரெஸ்டர் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 77 ரன்களில் விக்கெட்டை இழக்க, சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போட்ஜீட்டரும் 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் பிஜோர்ன் ஃபோர்டுயின் 59 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.