அயர்லாந்து தொடரில் இவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் - ஆகாஷ் சோப்ரா!
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி வரும் 26 மற்றும் 28ஆம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இல்லை.
அதற்கு காரணம், இவ்விரு வீரர்களும் டெஸ்ட் அணியில் விளையாடுவதால் , டி20 அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் திரிபாதிக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் 31 வயதான ராகுல் திரிபாதி, கடந்த பல சீசன்களாக ஐபிஎல் தொடரில் ரன் குவித்தும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த சீசனிலும் கூட ஹைதராபாத் அணிக்கு விளையாடிய திரிபாதி பல மிரட்டல் இன்னிங்சை ஆடினார். 14 போட்டியில் 413 ரன்கள் குவித்த திரிபாதிக்கு தென்னாப்பிரிக்க தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 17 போட்டியில் விளையாடி 458 ரன்கள் சஞ்சு சாம்சன் விளாசி இருந்தார். அவருக்கும் தென் ஆப்பிரிக்க தொடரில் வாய்ப்பு தரப்படவில்லை. தற்போது இருவரும் அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இவ்விருவருக்கும் வாய்ப்பு கிடைப்பது சந்தேககம் தான் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அயர்லாந்து அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் 9 பேர் பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர். தென் ஆப்பிரிக்க தொடரில் தேர்வாகியுள்ள இந்திய அணியில் ஏற்கனவே தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர் ஆகியாருக்கு வாய்ப்பு தரப்படவில்லை, இதனால், ஏற்கனவே அணியில் இருந்த இவ்விருவருக்கு மட்டும் தான் அயர்லாந்து தொடரில் இந்திய அணி முன்னுரிமை வழங்கும்.
அணியில் ஏற்கனவே ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா இருப்பதால் வெங்கடேஷ் ஐயருக்கும், அக்சர் பட்டேல் இருப்பதால் தீபக் ஹூடா ஆகியோர் அணியில் இருப்பது தேவையற்றது. அதற்கு பதில் ராகுல் திரிபாதியை தொடக்கத்திலும், சஞ்சு சாம்சனை நடுவரிசையிலும் தென் ஆப்பிரிக்க தொடரிலேயே பிசிசிஐ வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடைபெறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.