PAK vs WI, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி முல்தானில் இன்று நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஜமான் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரர் இமாம் உல் ஹக்கும் கேப்டன் பாபர் அசாமும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடினர். இருவருமே அரைசதம் அடித்தனர்.
இமாம் உல் ஹக்கும் பாபர் அசாமும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 120 ரன்களை குவித்தனர். இமாம் உல் ஹக் 72 ரன்களும், பாபர் அசாம் 77 ரன்களும் அடித்தனர். அதன்பின்னர் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்வரிசையில் ஷதாப் கான் மற்றும் குஷ்தில் ஷா ஆகிய இருவரும் தலா 22 ரன்கள் அடித்தனர்.
ஷாஹீன் அஃப்ரிடி 6 பந்தில் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 275 ரன்கள் அடித்து, 276 ரன்கள் என்ற சவாலான இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அகீல் ஹொசைன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஷாய் ஹோப் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த கைல் மேயர்ஸ் - ஷமாரா ப்ரூக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
அதன்பின் 33 ரன்களில் மெயார்ஸ் 33 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷமாரா ப்ரூக்ஸ் 42 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இதன்பின் களமிறங்கிய வீரர்களும் பாகிஸ்தான் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 32.2 ஓவர்களில் விண்டீஸ் அணி 155 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.