பாகிஸ்தான் 378 ரன்னில் ஆல் அவுட்; தடுமாறும் தென் ஆப்பிரிக்க அணி!

Updated: Mon, Oct 13 2025 20:16 IST
Image Source: Google

பாகிஸ்தன் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக் 93 ரன்களையும், ஷான் மசூத் 76 ரன்களையும், அப்துல்லா ஷபிக் 2 ரன்னிலும், நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் 23 ரன்களிலும், சௌத் ஷகீப் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் அலி அகா இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர்.

இதில் இருவரும் தங்களின் அரைசதங்களையும் பதிவு செய்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை முகமது ரிஸ்வான் 62 ரன்களுடனும், சல்மான் அலி அகா 52 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் ரிஸ்வான் 75 ரன்னிலும், சல்மான் அலி ஆகா 93 ரன்களிலும் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 378 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சேனுரன் முத்துசாமி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் கேப்டன் ஐடன் மார்க்ரம் 20 ரன்னிலும், வியான் முல்டர் 17 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த ரியன் ரிக்கெல்டன் - டோனி டி ஸோர்ஸி இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் தங்களின் அரைசதங்களையும் பதிவு செய்தனர். 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் 71 ரன்களில் ரியான் ரிக்கெல்டன் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 8 ரன்னிலும், டெவால்ட் பிரெவிஸ் ரன்கள் ஏதுமின்றியும், கைல் வெர்ரைன் 2 ரன்னிலும் என் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்டாநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டோனி டி ஸோர்ஸி 81 ரன்களுடனும், சேனுரன் முத்துசாமி 6 ரன்னிலும் என களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 162 ரன்கள் பின் தங்கிய நிலையில், தென் ஆப்பிரிக்க அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::