ஆசிய கோப்பை 2022: புவனேஷ்வர், ஹர்திக் அபாரம்; இந்திய அணிக்கு 148 டார்கெட்!

Updated: Sun, Aug 28 2022 21:33 IST
Image Source: Google

ஆசிய கோப்பை தொடரின் 15ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மேலும் இன்றைய போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார். 

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம், புவனேஷ்வர் குமார் வீசிய இரண்டாவது ஓவரிலேயே 10 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் அதிரடியாக தொடங்கிய ஃபகர் ஸமானை 10 ரன்களில் அவேஷ் கானிடம் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த முகமது ரிஸ்வான் - இஃப்திகார் அஹ்மத் இணை ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். பின் இஃப்திகார் 28 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது ரிஸ்வான் 43 ரன்களோடு ஹர்திக்கிடமே விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய குஷ்டில் ஷா, ஆசிஃப் அலி ஆகியோரும் சொற்ப ரன்களோடு பெவிலியனுக்கு திரும்ப, பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் களமிறங்கிய ஷான்நவாஸ் தஹானி அடுத்தடுத்து சில சிக்சர்களைப் பறக்கவிட்டு அசத்தினார்.

இதன்மூலம் 19.5 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை