ஆசிய கோப்பை 2022: பரபரப்பான ஆட்டத்தில் ஆஃப்கானை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் வாழ்வா சாவா கட்டத்தில் உள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் ஒரு வேலை பாகிஸ்தான் தோல்வியை தழுவினால், இந்தியா தொடரை விட்டு சென்றுவிடும். இதனால் இந்திய ரசிகர்களுக்கு இன்று ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கின்றனர். பரபரப்பான இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
இந்த ஆடுகளத்திலும் சேஸிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். இதனால் பெரிய இலக்கை நிர்ணயிக்கும் உத்வேகத்துடன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் ஹசரத்துல்லா மற்றும் ரஹமனுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருப்பினும் 3.5 வது ஓவரில் ஆப்கானிஸ்தான் 36 ரன்கள் எடுத்த நிலையில், முதல் விக்கெட்டை இழந்தது.
குர்பாஷ் 17 ரன்களில் ஆட்டமிழக்க, ஹஸ்ரத்துலா 21 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த கரிம் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் நிதானமாக விளையாடி 37 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். ஆஃப்கானிஸ்தான் 91 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் இருந்த போது அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி சரிவை நோக்கி சென்றது.
நஜிபுல்லா 10 ரன்களிலும், கரிம் 13 ரன்களிலும் வெளியேற கேப்டன் முகமது நபி டக் அவுட் ஆனார். இறுதியில் உமர்சாய் 10 ரன்களும், ரஷித் கான் 18 ரன்களும் எடுக்க, ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃப் 2 விக்கெட்டுகள் வீழ்த்த, மற்ற அனைவரும் 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதையடுத்து எளிய இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசாம் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்ப, அடுத்து வந்த ஃபகர் ஸமானும் 5 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதனைத் தொடர்ந்து மறுமுனையில் 20 ரன்கள் எடுத்த நிலையில் நட்சத்திர வீரர் ரிஸ்வானும் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த இஃப்திகார் அஹ்மத் - ஷதாப் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
பின்னர் 30 ரன்களில் இஃப்திகார் விக்கெட்டை இழக்க, பின் மறுமுனையில் 36 ரன்களுடன் அதிரடியாக விளையாடிய ஷதாப் கானும் ரஷித் கான் ஓவரில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்களாலும் ஆஃப்கானிஸ்தானின் அனல்வேக பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில் பாகிஸ்தன் அணி வெற்றிபெற கடைசி பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இளம் வீரர் நசீம் ஷா அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களைப் பறக்கவிட்டதுடன், ஆஃப்கானிஸ்தானை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தவும் வழிவகை செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி நடப்பாண்டு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது. மேலும் இதன் காரணமாக இந்திய அணி அதிகாரப்பூர்வமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.