மகளிர் உலகக்கோப்பை 2022: வெற்றி பயணத்தை தொடரும் ஆஸ்திரேலியா!

Updated: Fri, Mar 25 2022 11:52 IST
Image Source: Google

நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், அடுத்த இரு இடங்களை பிடிக்க இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதேசமயம் ஆட்டம் தொடங்குவதற்கு முன் மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக லதா மந்தல் மட்டும் ஓரளவு சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 33 ரன்களைச் சேர்த்தார். இதனால் 43 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் அலிசா ஹீலி 15, ரேச்சல் ஹெய்னஸ் 7, மெக் லெனிங் டக் அவுட், தஹிலா மெக்ராத் 3, அஷ்லே கார்ட்னர் 13 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தனர். 

இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பெத் மூனி அரைசதம் கடந்ததுடன் அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார்.

இதன்மூலம் 32.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பெத் மூனி 65 ரன்களைச் சேர்த்து ஆட்டநாயகி விருதையும் வென்றார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை