அலனா கிங் அபார பந்துவீச்சு; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை லீக் போட்டி இந்தூரில் உள்ள ஓல்கார் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கைத் தேர்வு செய்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய வோல்வார்ட் 7 பவுண்டரிகளுடன் 31 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து தஸ்மின் பிரிட்ஸ் 6 ரன்னிலும், சுனே லூஸ் 6 ரன்னிலும், அன்னேரி டெர்க்சன் 5 ரன்னிலும், மரிஸான் கேப் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அவர்களைத் தொட்ர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளில் சினோலா ஜாஃப்டா 29 ரன்களையும், நதின் டி கிளார்க் 14 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் வந்த வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 24 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்களில் ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அலானா கிங் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கமானது கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் போப் லிட்ச்ஃபீல்ட் 5 ரன்னிலும், எல்லிஸ் பெர்ரி ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜார்ஜியா வோல் மற்றும் பெத் மூனி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் உயர்த்தினர்.
Also Read: LIVE Cricket Score
இதில் அதிரடியாக விளையாடி வந்த பெத் மூனி 42 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை களத்தில் இருந்த ஜார்ஜியா வோல் 38 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 16.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி நடப்பு உலக கோப்பை தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்தது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அலனா கிங் ஆட்டநாய்கி விருதை வென்றார்.