IN-W vs AU-W, 3rd ODI: ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா போராட்டம் வீண்; தொடரை வென்றது ஆஸி!
India Women vs Australia Women 3rd ODI: ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 50 பந்துகளில் சதமடித்த நிலையிலும், இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வ்ருகிறது. தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய மகளிர் அணியும் வெற்றி பெற்ற தொடரை சமன் செய்தன. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அலிசா ஹீலி - ஜார்ஜியா வோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஹீலி 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த எல்லிஸ் பெர்ரியும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில் அரைசதம் கடந்து அசத்திய ஜார்ஜியா வோல் சதத்தை நெருங்கிய நிலையில் 81 ரன்களுக்கும், மறுபக்கம் எல்லிஸ் பெர்ரி 68 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
பின்னர் களமிறங்கிய பெத் மூனி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 4ஆவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இதில் அவர் 23 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 138 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீராங்கனைகளில் ஆஷ்லே கார்ட்னர் 39 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 412 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய பிரதிகா ராவல் 10 ரன்னிலும், ஹர்லீன் தியோல் 11 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் தனது அதிரடியை கைவிடாத ஸ்மிருதி மந்தனா 50 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
இதில் மந்தனா 17 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 125 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த தீப்தி சர்மா இறுதிவரை போராடி 72 ரன்களிலும், ஸ்நே ரானா 35 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீராங்கனைகள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். இதனால் இந்திய மகளிர் அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா தரப்பில் கிம் காரத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Also Read: LIVE Cricket Score
இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதம் விளாசிய பெத் மூனி ஆட்டநாயகியாகவும், ஸ்மிருதி மந்தனா தொடர் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.