நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது இன்று (மார்ச் 21) தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Advertisement

இதில் நியூசிலாந்து மகளிர் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயன முதல் டி20 போட்டியானது ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து மகளிர் அணிக்கு கேப்டன் சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிலிம்மர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 32 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் சூஸி பேட்ஸ் 14 ரன்களைச் சேர்த்த கையோடு தனது விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை ஜார்ஜியா பிலிம்மரும் 27 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய அமெலியா கெர் மற்றும் சோஃபி டிவைன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அமெலியா கெர் அரைசதம் கடந்ததுடன் 5 பவுண்டரிகளுடன் 51 ரன்களையும், சோஃபி டிவைன் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே சேர்த்தது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் டார்சி பிரௌன் மற்றும் தஹ்லியா மெக்ராத் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு பெத் மூனி மற்றும் ஜார்ஜியா வோல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். மேற்கொண்டு இருவரும் இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 123 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றியையும் உறுதிசெய்தனர். 

பின்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜார்ஜியா வோல் 9 பவுண்டரிகளுடன் 50 ரன்களையும், பெத் மூனி 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 75 ரன்களைச் சேர்த்து தங்கள் விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் அடுத்து களமிறங்கிய போஃப் லிட்ச்ஃபீல்ட், எல்லிஸ் பெர்ரி இணை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 13.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்த டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலைப் பெற்றுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News