பெத் மூனி, அலனா கிங் அசத்தல்; பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொட்ரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொழும்புவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு அலிச ஹீலி - போப் லிட்ச்ஃபீல்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அலிசா ஹீலி 20 ரன்னிலும், லிட்ச்ஃபீல்ட் 10 ரன்னிலும் என ஆட்டமிழக்க, அடுத்து வந்த எல்லிஸ் பெர்ரி 5 ரன்களை மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார்.
பின்னர் களமிறங்கிய பெத் மூனி ஒருபக்கம் நிதானமாக விளையாடிய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய அனபெல் சதர்லேண்ட், ஆஷ்லே கார்ட்னர், தஹ்லியா மெஹ்ராத், ஜார்ஜிய வெர்ஹாம், கிம் கார்த் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பெத் மூனி - அலனா கிங் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் பெத் மூனி தனது சதத்தைப் பதிவு செய்து அசத்திய நிலையில், அலனா கிங் அரைசதம் கடந்து அசத்தினார்.
இறுதியில் 11 பவுண்டரிகளுடன் 109 ரன்களை சேர்த்து பெத் மூனி விக்கெட்டை இழந்தார். மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அலானா கிங் பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 51 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நஷ்ரா சந்து 3 விக்கெட்டுகளையும், கேப்டன் ஃபாத்திமா சனா மற்றும் ரமீன் ஷமிம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீராங்கனைகள் சதாப் ஷமாஸ் 5 ரன்னிலும், முனீபா அலி 3 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய சித்ரா அமின் ஒருபக்கம் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்த முயற்சித்த நிலையில், மறுபக்கம் களமிறங்கிய சித்ரா நவாஸ் 5 ரன்னிலும், நடாலியா பர்வைஸ் ஒரு ரன்னிலும், எய்மன் ஃபாத்திமா ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ஃபாத்திமா சனா 11 ரன்னிலும், ரமீன் ஷமிம் 15 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர்.
Also Read: LIVE Cricket Score
இறுதியில் 35 ரன்களைச் சேர்த்த கையோடு சித்ரா அமீனும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீராங்கனைகளும் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 36.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா தரப்பில் கிம் கார்த் 3 விக்கெட்டுகளையும், மேகன் ஷாட், அனபெல் சதர்லேண்ட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த போட்டியில் சதம் விளாசிய பெத் மூனி ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.