ஐபிஎல் 2021: மேலும் ஒரு ஆர்சிபி வீரருக்கு கரோனா
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக்கின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த சீசனுக்கான முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல்லுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இது பெங்களூரு அணியை பொறுத்தவரை பெரும் நெருக்கடியாக அமைந்துள்ள நிலையில், பெங்களூரு அணியின் ஆல்ரவுண்டரான டேனியல் சாம்ஸுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் டேனியல் சம்ஸிற்கு கரோனா அறிகுறிகள் இல்லாத நிலையில், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு அணி தனதுட்விட்டர் பக்கத்தில், "சென்னை வந்த டேனியல் சாம்ஸுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் பரிசோதனை முடிவில், அவருக்கு தொற்று உறுதியானது. கரோனா தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், தற்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் தொடர்ந்து டேனியல் சாம்ஸின் உடல் நிலையைக் கண்காணி்த்து வருகின்றனர்" எனப் பதிவிடப்பட்டுள்ளது.
வீரர்கள் கரோனா தொற்றால் பாதிப்பது அதிகரித்து வரும் தகவல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகத்திற்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.