WI vs IRE, 1st ODI: சதத்தைத் தவறவிட்ட ஷமர் ப்ரூக்ஸ்; வீண்டீஸ் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கயனாவில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப் 29 ரன்களிலும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 7 ரன்னிலும், நிக்கோலஸ் பூரன் 13 ரன்னிலும், ரோஸ்டன் சேஸ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷமர் ப்ரூக்ஸ் - கேப்டன் பொல்லார்ட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்தனர்.
பின் 69 ரன்களில் பொல்லார்ட் ஆட்டமிழக்க, மறுமுனையில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷமர் ப்ரூக்ஸ் 93 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் 48.5 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அதிர், கிரேக் யங் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை துரத்திய அயர்லாந்து அணியில் கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி - ஹேரி டெக்டர் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.
இதனால் 49.1 ஓவர்களில் அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக பால்பிர்னி 71 ரன்களையும், டெக்டர் 53 ரன்களையும் சேர்த்தனர். விண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப், ரோமாரியோ செஃபெர்ட் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.