IRE vs ENG, 3rd T20I: அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்டர் ஜோர்டன் காக்ஸ் அரைசதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார்.

Advertisement

இங்கிலாந்து அணி தற்சமயம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று டப்ளினில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியில் கேப்டன் பால் ஸ்டிர்லிங் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த ரோஸ் அதிர் - ஹாரி டெக்டர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதத்தை நெருங்கிய ரோஸ் அதிர் 33 ரன்களிலும், ஹாரி டெக்டர் 28 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த லோர்கன் டக்கர், கர்டிஸ் காம்பேர் ஆகியோரும் சோபிக்க தவறினர். 

பின்னர் இணைந்த பெஞ்சமீன் கலிட்ஸ் - கரெத் டெலானி இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் கலிட்ஸ் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டெலானி 4 பவுண்டரி,  3 சிக்ஸர்கள் என 48 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன் மூலம் அயர்லாந்து அணி 20 ஓவர்க்ளில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷித் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் - ஜோஸ் பட்லர் தொடக்கம் கொடுத்தனர். இதில் பட்லர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த ஜேக்கப் பெத்தெலும் 15 ரன்களில் நடையைக் கட்ட, மற்றொரு தொடக்க வீரரான பில் சால்டும் 29 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

பின்னர் இணைந்த ஜோர்டன் காக்ஸ் - டாம் பாண்டன் இணை சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய ஜோர்டன் காக்ஸ் அரைசதம் கடந்தும் அசத்தினார். பின்னர் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 55 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஜோர்டன் தனது விக்கெட்டை இழந்தார். 

Also Read: LIVE Cricket Score
Advertisement

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டாம் பாண்டன் 37 ரன்களையும், ரெஹான் அஹ்மத் 9 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News