வங்கதேசத்திற்கு எதிராக இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடும் அயர்லாந்து!

Updated: Thu, Nov 13 2025 20:03 IST
Image Source: Google

அயர்லாந்து அணி தற்சமயம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது நேற்று சில்ஹெட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங் 60 ரன்னிலும், கேட் கார்மைக்கேல் 59 ரன்னிலும், கர்டிஸ் காம்பேர் 44 ரன்களையும், லோர்கன் டக்க்ர் 41 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அயர்லாந்து அணி 286 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் மெஹதி ஹசன் 3 விக்கெட்டுகளையும், ஹசன் மஹ்முத், தைஜுல் இஸ்லாம் மற்றும் ஹசன் முரத் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு மஹ்முதுல் ஹசன் - ஷதமான் இஸ்லாம் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 160 ரன்களைச் சேர்த்த நிலையில் ஷாத்மான் இஸ்லாம் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 80 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய மொமினுல் ஹக்கும் ஒருபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷாத்மான் இஸ்லாம் சதமடித்து அசத்தினார்.

இதன் மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 338 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஷாத்மான் இஸ்லாம் 169 ரன்களுடனும், மொமினுல் ஹக் 80 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் ஷாத்மான் 14 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 171 ரன்னிலும், மொனினுல் ஹக் 82 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ- லிட்டன் தாஸ் இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை மாளமளவென உயர்த்தினர். இதில் அபாரமாக விளையாடிய நஜ்முல் ஹொசைன் சாண்டோ சதமடித்தும், லிட்டன் தாஸ் அரைசதம் கடந்தும் மிரட்டினர். பின்னர் 100 ரன்களுடன் ஷாண்டோவும், 60 ரன்களுடன் லிட்டன் தாஸூம் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர். 

இதனால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 587 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்தது. அயர்லாந்து தரப்பில் மேத்யூ ஹாம்ஷைர்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 300 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த அயர்லாந்து அணியில் கார்மைக்கெல், ஹாரி டெக்டர், கர்டிஸ் காம்பேர், லோர்கன் டக்கர் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பால் ஸ்டிர்லிங்கும் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அயர்லாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில்  5 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் ஆண்டி மெக்பிரைன் 4 ரன்களுடனும், மேத்யூ ஹாம்ஷைர்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 215 ரன்கள் பின் தங்கிய நிலையில் நாளை நான்காம் நாள் ஆட்டத்தை அயர்லாந்து தொடரவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை