பிசிசிஐ தேர்வு குழுவில் மீண்டும் தலைவராகும் சேத்தன் சர்மா?

Updated: Tue, Jan 03 2023 11:02 IST
Image Source: Google

அண்மையில் முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவி வெளியேறி இருந்தது இந்திய கிரிக்கெட் அணி. இதனால் இந்திய அணி மீது விமர்சனங்கள் எழ, இந்திய அணியை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவை கூண்டோடு கலைத்தது பிசிசிஐ.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழுவில், சுனில் ஜோஷி, ஹர்விந்தர் சிங் மற்றும் தேபாஷிஷ் மொஹந்தி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழுவை கூண்டோடு கலைத்த பிசிசிஐ புதிய தேர்வுக் குழுவுக்கு தேர்வு செய்ய தீர்மானித்திருந்தது.

இதனிடையே, மீண்டும் சேத்தன் சர்மாவே தேர்வுக்குழு தலைவராக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தேர்வுக் குழுவுக்கான நேர்காணல் சில தினங்களுக்கு முன் நடந்தது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அசோக் மல்ஹோத்ரா, சுலக்ஷனா நாயக் மற்றும் ஜதின் பரஞ்சபே ஆகியோர் அடங்கிய குழு மொத்தம் 12 வேட்பாளர்களை நேர்காணல் செய்தது.

இதில், ஷிவ் சுந்தர் தாஸ், அமய் குராசியா, அஜய் ராத்ரா, சலில் அன்கோலா, எஸ். ஷரத் மற்றும் கானர் வில்லியம்ஸ் ஆகியோர் உடன் ஏற்கனவே தேர்வுக்குழுவில் அங்கம் வகித்த சேத்தன் சர்மா மற்றும் ஹர்விந்தர் சிங்கும் நேர்காணலில் பங்கேற்றுள்ளனர்.

இந்தநிலையில்தான் சேத்தன் சர்மா மீண்டும் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை