இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுத்த படிக்கல், அக்ஸர் படேல்!
India Squad For West Indies Test: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து கருண் நாயர் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி அடுத்த மாதம் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிகு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2ஆம் தேதி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்கான ரோஸ்டன் சேஸ் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் டெக்நரைன் சந்தர்பால், அலிக் அதானாஸ் ஆகியோர் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அல்ஸாரி ஜோசப், ஷமார் ஜோசப், ஷாய் ஹோப், பிராண்டன் கிங், ஜோமல் வாரிக்கன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் அணியில் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
இந்த் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான 16 பேர் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ இன்றைய தினம் அறிவித்துள்ளது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்த அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு துணைக்கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரிஷப் பந்த் காயம் காரணமாக தொடரில் இடம்பெறாத நிலையில், அவருக்கு மாற்றாக தமிழ்நாட்டை சேர்ந்த ஜெகதீசன் கூடுதல் விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்திருந்த கருண் நாயர், அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோர் இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு தேவ்தத் படிக்கல், அக்ஸர் படேல், நிதீஷ் ரெட்டி ஆகியோர் மீண்டும் டெஸ்ட் அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளனர். இதுதவிர்த்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், சர்ஃப்ராஸ் கான் உள்ளிட்டோரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் புறக்கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, என் ஜெகதீசன், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்