ஸ்ரேயாஸ் ஐயர் உடல்நிலை குறித்த அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ!
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
முன்னதாக இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியின் போது இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்தார். அலெக்ஸ் கேரி அடித்த பந்தை கேட்ச் பிடிக்கும் போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன்பின் அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறியதுடன், சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு மேற்கொள்ளபட்ட ஸ்கேன் பரிசோதனையின் முடிவில், அவரது மண்ணீரலில் காயம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு, தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்றைய தினம் அவர் ஐசியு-வில் இருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மேலும் அவர் குணமடைந்து வருவதாகவும் இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலை குறித்த அப்டேட்டை பிசிசிஐ வழங்கியுள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் உடனடியாக அடையாளம் காணப்பட்டதுடன், இரத்தப்போக்கும் உடனடியாக நிறுத்தப்பட்டது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது, மேலும் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்” என்று கூறியுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், “ஸ்ரேயாஸ் ஐயருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் தற்சமயம் குணமடையும் கட்டத்தை எட்டியுள்ளார். சிட்னி மற்றும் இந்தியாவில் உள்ள நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, பிசிசிஐ மருத்துவக் குழு அவரது முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளது.
Also Read: LIVE Cricket Score
பிசிசிஐ வழங்கிய இந்த அப்டேட்டானது ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளது. இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய சில காலம் ஆகும் என்பதால், சில மாதங்கள் அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பார் என்பதும் உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் விளையாட மாட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.