Indian cricket team
ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக்கொண்டது நல்லது - கௌதம் கம்பீர்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின், இந்திய அணியில் ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளருக்கான பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தொடர்ந்து ராகுல் டிராவிட் நீடிப்பாரா இல்லை விவிஎஸ் லக்சுமன் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் உலகக்கோப்பையில் ராகுல் டிராவிட்டின் தலைசிறந்த பங்களிப்பையும், இந்திய அணியில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும் பாராட்டியிருக்கும் பிசிசிஐ, தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக செயல்பட ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது.
ராகுல் டிராவிட்டின் பதவி நீட்டிப்பு குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, “ உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றிபெறுவதெல்லாம் சாதாரண விசயம் கிடையாது. ஒரு சரியான பாதையில் இந்திய அணியை வழிநடத்தியதற்காக நாம் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை பாராட்ட வேண்டும். நாங்கள் ராகுல் டிராவிட்டை ஒரு தலைமை பயிற்சியாளராக முழுவதுமாக ஆதரிக்கிறோம். தொடர்ந்து அவர் இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல அனைத்து ஆதரவையும் வழங்குவோம்” என தெரிவித்துள்ளார்.