ஆஸ்திரேலிய வீரருக்கு இன்ஸ்டாகிராமில் கொலை மிரட்டல்!

Updated: Tue, Mar 01 2022 16:49 IST
Cricket Australia dismiss 'death threat' to Ashton Agar on eve of historic Pakistan series (Image Source: Google)

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. டெஸ்ட் தொடர் மார்ச் 4 அன்றும் ஒருநாள் தொடர் மார்ச் 29 அன்றும் தொடங்குகின்றன. டி20 ஆட்டம் ஏப்ரல் 5 அன்று நடைபெறுகிறது. 

முதல் டெஸ்ட், ஒருநாள் தொடர், டி20 ஆட்டம் ஆகியவை ராவல்பிண்டியிலும் கராச்சி, லாகூரில் தலா ஒரு டெஸ்டும் நடைபெறுகின்றன. 2019 ஆஷஸுக்குப் பிறகு முதல்முறையாக வெளிநாட்டில் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி. 

இந்நிலையில் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆஷ்டன் அகரின் மனைவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்களுடைய கணவர் பாகிஸ்தானுக்குச் சென்றால் அவர் உயிருடன் திரும்ப மாட்டார் என இன்ஸ்டகிராம் வழியே ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். தனது இன்ஸ்டகிராம் கணக்கு வழியே விடுக்கப்பட்ட மிரட்டலைக் கண்டு பதறிய அகரின் மனைவி மெடிலீன், உடனடியாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு இதுபற்றி தகவல் அளித்தார். 

சமூகவலைத்தளம் வழியாக விடுக்கப்பட்ட மிரட்டலை பாகிஸ்தான், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் பரிசோதித்துப் பார்த்ததில் மிரட்டல் விடுத்தவர் ஒரு போலியான கணக்கைத் தொடங்கி இதைச் செய்ததாகத் தெரிந்தது. எனவே அந்த மிரட்டலால் ஆபத்து எதுவும் இல்லை என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று அணிகளிலும் ஆஷ்டன் அகர் இடம்பெற்றுள்ளார்.

கடந்த வருடம் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து அணி திடீரென பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரணமாகக் கூறி எந்த ஆட்டத்திலும் விளையாடாமல் நாட்டுக்குத் திரும்பியது. அடுத்ததாக இங்கிலாந்தும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது. இதையடுத்து தற்போது ஆஸ்திரேலியா, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்திருப்பது முக்கிய கிரிக்கெட் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ள மூன்று தொடர்களும் எவ்விதச் சிக்கலும் இன்றி நடப்பதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை