தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ப்ளூம்ஃபோன்டைனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி குயின்டன் டி காக் - டெம்பா பவுமா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டி காக் 11 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரஸ்ஸி வேண்டர் டூசென் 8 ரன்களுக்கும், ஐடன் மார்க்ரம் 19 ரன்களிலும், ஹென்ரிச் கிளாசென் 14 ரன்களிலும், டேவிட் மில்லர் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

இருப்பினும் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் டெம்பா பவுமா அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு துணையாக மார்கோ ஜான்செனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்கோ ஜான்சென் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 32 ரன்களை எடுத்து விக்கெட்டை இழந்தார். 

அதனைத்தொடர்ந்து வந்த ஜெரால்ட் கோட்ஸி 2, கேசவ் மகாராஜ் 2, காகிசோ ரபாடா ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் டெம்பா பவுமா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 5ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டெம்பா பவுமா 114 ரன்களை எடுத்திருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மிட்செல் மார்ஷும் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

Advertisement

இதற்கிடையில் அதிரடி வீரர் கேமரூன் க்ரீன் தலையில் பந்து பட்டு காயமடைந்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 93 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது கேமரூன் க்ரீனுக்கு மற்றுவீரராக கன்கஷன் சப்ஸ்டிடியூட் முறையில் மார்னஸ் லபுஷாக்னே களமிறங்கினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் கன்கஷன் சப்ஸ்டிடியூட் முறையில் களமிறங்கிய வீரர் எனும் சாதனையையும் படைத்தார். 

அதன்பின் லபுஷாக்னே - ஆஷ்டன் அகர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியை கொடுத்தனர். அதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லபுஷாக்னே அரைசதம் கடந்து அசத்தினார். அத்துடன் இருவரும் இணைந்து 8ஆவது விக்கெட்டிற்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றியையும் உறுதிசெய்னர். 

பின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்னஸ் லபுஷாக்னே 80 ரன்களுடனும், ஆஷ்டன் அகர் 8 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 40.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னில்லைப் பெற்றது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News