ஐபிஎல் 2022: சிஎஸ்கேவில் இணைந்த டேவன் கான்வே- அவரின் டி20 புள்ளிவிவரம் இதோ!
ஐபிஎல் 154ஆவது சீசனுக்கு முன்பு நடைபெற்ற ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேத்தேஸ்வர் புஜாராவை ஏலம் எடுத்திருந்தது. டெஸ்ட் வீரரை ஏலம் எடுத்ததை பலரும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த மெகா ஏலத்தில், ஓபனருக்கான இடத்திற்கு ஜேசன் ராய், குவின்டன் டி காக் போன்றவர்களை எல்லாம் விட்டுவிட்டு, நியூசிலாந்து வீரர் டேவன் கான்வேவை, சிஎஸ்கே ஏலம் எடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து, புஜாராவுக்கு மாற்றாக கான்வே வந்துள்ளார் என பலரும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. சமீப காலமாகவே அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே அதிகம் தலைகாட்டி வருகிறார். கடந்த ஆண்டில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பு, நியூசிலாந்து அணி இங்கிலாந்து சென்றபோது கான்வே அறிமுக வீரராக களமிறங்கி, இரட்டை சதம் அடித்து தனது இடத்தை உறுதி செய்தார்.
இதனால், லண்டனில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் கான்வே நியூசிலாந்து அணியின் தொடக்க வீரராக இருந்தார். இருப்பினும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதன்பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இருக்கிறார். இதுவரை மொத்தம் 7 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 63.9 சாரசரியுடன் 767 ரன்களை குவித்துள்ளார்.
இவர் சமீபத்தில் அதிகமாக டெஸ்டில் மட்டும் பங்கேற்பதால், கான்வேவின் டி20 ரெக்கார்ட் வெளியில் தெரியாமல் இருந்து வருகிறது. இவர் 2020ஆம் ஆண்டு முதல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பங்கேற்று, 50.2 சராசரியுடன் 602 ரன்களை குவித்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 139.3 ஆகும். அதில் 4 அரை சதங்களும் அடித்துள்ளார். ஒருமுறை 99 ரன்கள் எடுத்து, சதத்தையும் தவறவிட்டுள்ளார். இதன்மூலம், கான்வே ஒரு நட்சத்திர டி20 தொடக்க வீரர் என்பது தெரிய வருகிறது.
டி காக், ஜேசன் ராய் போன்றவர்களுக்கு சரி சமமான ஓபனராக இருப்பார் என்பது, இந்த புள்ளி விபரங்கள் காட்டுகிறது. இவர் கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்றார். அதன்பிறகு, டி20 கிரிக்கெட்டில் பங்கேற்கவில்லை. இருப்பினும், டி20 தரவரிசையில் இன்னமும் 5ஆவது இடத்தில் நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிஎஸ்கேவின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் காடந்த சீசனில் அபாரமாக விளையாடிய, தொடரில் அதிக ரன்களை குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்தினார். தற்போது அவருடன் டேவன் கான்வே இணைந்து தொடக்க வீரராக களமிறங்கவுள்ளதால் இந்த ஜோடியின் மீதான எதிர்பார்ப்பு பண்மடங்கு அதிகரித்துள்ளது.
ஏனெனில் ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் ருதுராஜ் கெய்க்வாட், 132 ஸ்டிரைக் ரேட்டுடன் 839 ரன்களைக் குவித்துள்ளார். அதுமட்டுமில்லாம விஜய் ஹசாரே, சயித் முஷ்டாக் அலி போன்ற உள்ளூர் தொடர்களிலும் தனது அதிரடி ஆட்டத்தினால் மிராட்டியுள்ளார்.
அதற்கேற்றவாரே டேவன் கான்வேவும் சர்வதேசம் மற்றும் உள்ளூர் போட்டிகள் என அனைத்திலும் தனது அதிரடியை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் நடப்பு சீசனில் இந்த தொடக்க இணை எப்படி செயல்படும் என்ற எதிர்ப்பார்புகள் அதிகரித்துள்ளன.