வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது நியூசிலாந்து!

Updated: Sun, Nov 09 2025 19:59 IST
Image Source: Google

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன.  இந்த நிலையில், நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நெல்சனில் ஊள்ள சாக்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - டிம் ராபின்சன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கான்வே ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் டிம் ராபின்சன் 23 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திராவும் 26 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து அசத்திய டெவான் கான்வே 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிட டேரில் மிட்செல் வழக்கம் போல் அதிரடியாக விளையாடினார். 

மறுமுனையில் விளையாடிய ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னர், மிட்செல் ஹென்றி, கைல் ஜேமிசன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மேலும் அதிரடியாக விளையாடிய டேரில் மிட்செலும் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களையும் விளாசி 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மேத்யூ ஃபோர்ட் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அமிர் ஜாங்கூ 5 ரன்னிலும், கேப்டன் ஷாய் ஹோப் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய அலிக் அதனாஸ் 31 ரன்களிலும், அகீம் அகஸ்டே 24 ரன்களிலும் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து வந்த வீரர்களான ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரோவ்மன் பாவெல், ஜேசன் ஹோல்டர் உள்ளிட்டோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Also Read: LIVE Cricket Score

அதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரொமாரியோ ஷெஃபெர்ட் - ஷமார் ஸ்பிரிங்கர் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஷெஃபெர்ட் 49 ரன்களிலும், ஷமார் ஸ்பிரிங்கர் 39 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 19.5 ஓவர்களில் 168 ரன்களைச் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, இஷ் சோதி தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை