ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸிற்கு எதிராக சாதனைப் படைத்த டேவிட் வார்னர்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 32வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ப்ரித்வி ஷா 41 ரன்களும், டேவிட் வார்னர் 30 பந்துகளில் 60 ரன்களும் (நாட்-அவுட்) எடுத்து கொடுத்ததன் மூலம், 10.3 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய டெல்லி, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் 60 ரன்கள் எடுத்த டேவிட் வார்னர், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மட்டும் 1,000 ரன்கள் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பாக ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 1,000 ஐபிஎல் ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா படைத்திருந்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ரோஹித் சர்மா 1,000 ரன்கள் (30 போட்டிகளில்) எடுத்திருந்தார். அந்த வரிசையில் ஒரே ஒரு அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரராக டேவிட் வார்னர் இப்போது இணைந்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 22 போட்டிகளில் 1,005 ரன்கள் குவித்திருக்கிறார் வார்னர்.
அவரது சாதனையை டெல்லி அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் வார்னரின் தொடர்ச்சியான 3வது அரைசதம் இதுவாகும்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் விளாசியவர்களின் பட்டியலில் ஷிகர் தவான் (874 ரன்கள்), சுரேஷ் ரெய்னா (822 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.