ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து வீரர்களை கடுமையாக விமர்சித்த மைக்கேல் வாகன்!

Updated: Tue, Dec 28 2021 16:59 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. 

பிரிஸ்பேன் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, மெல்போர்னில் நடந்த 3ஆவது டெஸ்ட் போட்டியிலும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி முதல் இன்னிங்ஸில் வெறும் 185 ரன்கள் அடித்தது இங்கிலாந்து அணி. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 267 ரன்கள் அடித்தது. 82 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, வெறும் 68 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததுடன், தொடரையும் இழந்தது.

இந்த போட்டி 3ஆம் நாள் ஆட்டத்தின் முதல் செசனிலேயே முடிந்தது. 2ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் அடித்திருந்தது. ரூட்டும் ஸ்டோக்ஸும் களத்தில் இருந்தனர். 3ஆம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனில் அந்த எஞ்சிய 6 விக்கெட்டுகளையும் வெறும் 12.4 ஓவரில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. இங்கிலாந்து அணி இந்த தொடர் முழுவதிலும் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் படுமோசமாக செயல்பட்டு படுதோல்விகளை  அடைந்துவருகிறது.

இங்கிலாந்து அணியில் நல்ல சூழல் இல்லை என்பது மட்டும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஏனெனில் இங்கிலாந்து பவுலர்கள் சரியான ஏரியாவில் பந்துவீசவில்லை என்று அந்த அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்திருந்தார். அதற்கு, வீரர்களிடமிருந்து என்ன தேவையோ அதை வாங்குவதற்குத்தான் கேப்டனே தவிர, களத்தில் கம்முனு இருந்துவிட்டு வீரர்களை குறைகூறுவது கேப்டனுக்கான அழக்கல்ல என்ற விமர்சனம் எழுந்தது. 

இந்நிலையில், 3ஆவது டெஸ்ட்டிலும் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்த நிலையில், அதன்பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு, நேர்காணல் என அனைத்திலுமே இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மட்டுமே கலந்துகொண்டார். இங்கிலாந்து வீரர்கள் யாருமே ரூட்டுக்கு ஆதரவாக இல்லாமல், அவரை தனித்துவிட்டதற்கு முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய மைக்கேல் வான், ”3ஆவது டெஸ்ட் தோல்விக்கு பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு, கில்கிறிஸ்ட்டுடனான நேர்காணல் ஆகிய அனைத்திலுமே ஜோ ரூட் தனியாக கலந்துகொண்டார். ஒரு இங்கிலாந்து வீரரைக்கூட நான் காணவில்லை. போட்டி முடிந்ததும் நேரடியாக டிரெஸிங் ரூமுக்கு சென்றுவிட்டனர். இங்கிலாந்து வீரர்கள் தொடர் தோல்விகளால் மற்றவர்களை எதிர்கொள்ள கூச்சப்படுகின்றனர். அவர்கள் தர்மசங்கடத்தில் இருக்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது. 

68 ரன்னுக்கு ஆல் அவுட்டானால் கூச்சப்படத்தான் வேண்டும். ஆனால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். கேப்டனுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். அனைவரும் ஒதுங்கிக்கொண்டனர். இப்போது கேப்டன் மட்டுமே அனைத்து கேள்விகளுக்கும் தனி நபராக பதிலளிக்க வேண்டும். ரூட் அதையும் செய்திருக்கிறார். கடினமான நேரங்களில் வீரர்கள் கேப்டனுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை