ENG vs SA, 3rd ODI: ஜோ ரூட், ஜேக்கப் பெத்தெல் சதத்தால் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி!

Updated: Mon, Sep 08 2025 06:24 IST
Image Source: X

ENG vs SA, 3rd ODI: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் ஜேக்கப் பெத்தல் ஆகியோர் சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று சௌத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜேமி ஸ்மித் - பென் டக்கெட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் டக்கெட் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து அரைசதம் கடந்திருந்த ஜேமி ஸ்மித்தும் 62 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ஜோ ரூட் மற்றும் ஜேக்கப் பெத்தெல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஜேக்கப் பெத்தெல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையும், ஜோ ரூட் தனது 19ஆவது ஒருநாள் சதத்தையும் பதிவுசெய்ததுடன், இருவரும் இணைந்து 180 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

பின் 110 ரன்களில் பெத்தலும், 100 ரன்களில் ஜோ ரூட்டும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லரும் தனது பங்கிற்கு 62 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 414 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் கார்பின் போஷ், கேசவ் மஹாராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியில் ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், வியான் முலடர், மேத்யூ பிரீட்ஸ்கி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் பிரீவிஸ் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். 

Also Read: LIVE Cricket Score

அந்த அணியில் அதிகபட்சமாகவே கார்பின் போஷ் 20 ரன்களையும், கேசவ் மஹாராஜ் 17 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 20.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ரன்களில் ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட்டுகளையும், ஆதில் ரஷித் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 342 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை