துலீப் கோப்பை 2022: இரட்டை சதம் விளாசி சாதனைப் படைத்த ஜெய்ஸ்வால்!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு மண்டல அணியும், தெற்கு மண்டல அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
அதன்படி களமிறங்கிய மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 270 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் பேட்டர் ஹெட் படேல் 98 ரன்கள் எடுத்தார். தமிழக வீரர் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து களமிறங்கிய தெற்கு மண்டல அணி, 83.1 ஓவர்களில் 327 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது. இதில் தமிழக வீரர் பாபா இந்திரஜித் சிறப்பாக விளையாடி சதமடித்தார். இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடிய 3 ஆட்டங்களில் 3 சதங்கள், ஒரு அரை சதமெடுத்த இந்திரஜித் (3 ஆட்டங்களில் 396 ரன்கள், சராசரி - 99.00), துலீப் கோப்பை இறுதி ஆட்டத்திலும் சதமடித்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் மேற்கு மண்டல அணி அபாரமாக விளையாடி வருகிறது. அந்த அணி 3ஆம் நாள் முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 376 ரன்கள் எடுத்துள்ளது. இதில் 20 வயது தொடக்க வீரர் ஜெயிஸ்வால், 244 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 23 பவுண்டரிகளுடன் 209 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
துலீப் கோப்பை காலிறுதியில் இரட்டைச் சதமடித்த ஜெயிஸ்வால், இறுதிச்சுற்றிலும் இன்னொரு இரட்டைச் சதமடித்து சாதனை படைத்துள்ளார். ஜெயிஸ்வால் 209, சர்ஃபராஸ் கான் 30 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ஸ்ரேயஸ் ஐயர் 71 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 3ஆம் நாள் முடிவில் மேற்கு மண்டல அணி, 319 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முதல்தர இறுதிப் போட்டியில் குறைந்த வயதில் (20 வருடங்கள் 269 நாள்கள்) இரட்டைச் சதமடித்த இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் ஜெயிஸ்வால். இதற்கு முன்பு அஜித் வதேகர், 1962ஆம் அண்டு 20 வருடங்கள் 354 நாள்களில் இரட்டைச் சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.