ஷுப்மன் கில், ஜடேஜா அபாரம்; பேட்டிங்கில் சொதப்பும் வெஸ்ட் இண்டீஸ்!
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில், அனுபவ வீரர் கேஎல் ராகுல் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 38 ரன்களில் விக்கெடை இழந்தார். அதன்பின் இணைந்த யஷஸ்வி - சாய் சுதர்ஷன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7ஆவது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.
அவருடன் இணைந்து விளையாடிய சாய் சுதர்ஷனும் அரைசதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் இருவருடைய பார்ட்னர்ஷிப்பும் 200 ரன்களை நெருங்கிய நிலையில், சாய் சுதர்ஷன் 12 பவுண்டரிகளுடன் 87 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில் ஒருபக்கம் நிதானமாக விளையாட, மறுமுனையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் இந்திய அணி முதல் நாள் ஆட்நேர முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 318 ரன்களைக் குவித்தது.
இந்நிலையில், இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை யஷஸ்வி ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும், ஷுப்மன் கில் 20 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடங்கியது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 175 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 43 ரன்களுக்கும், துருவ் ஜூரெல் 44 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் சதமடித்ததுடன் 129 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜான் காம்பேல் - டேகனரைன் சந்தர்பால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் காம்பெல் 10 ரன்களில் நடையைக் கட்ட, மற்றொரு தொடக்க வீரரான சந்தர்பாலும் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மேலும் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய அலிக் அதனாஸும் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 41 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, கேப்டன் ரோஸ்டன் சேஸும் டக் அவுட்டானது. பின்னர் இணைந்த ஷாய் ஹோப் மற்றும் டெவின் இம்லாச் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.
இதன் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் ஷாய் ஹோப் 31 ரன்களுடனும், டெவின் இம்ளச் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 378 ரன்கள் பின் தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி நாளை 3ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.