ENG vs IND: மருத்துவமனையில் ஜடேஜா; அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்பாரா?
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன.
இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்களிலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடாதது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவருக்கு பதிலாக விளையாடிய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 3 போட்டிகளிலும் பந்துவீச்சில் சோபிக்கவில்லை என்றாலும் தனது பேட்டிங்கால் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் மீதமுள்ள 4ஆவது மற்றும் 5ஆவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா விளையாடமாட்டார் என்று தெரிகிறது. ஏனெனில் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது நாளின் போது அவர் கால் மூட்டில் காயமடைந்தார்.
ஆனாலும் போட்டி முடியும்வரை அவர் 4 ஆவது நாள் வரை விளையாடினார். இதன் காரணமாக காயத்தால் ஏற்பட்ட வலி காரணமாக ரவீந்திர ஜடேஜா நேற்று ஸ்கேன் செய்ய மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மேலும் அவர் மருத்துவமனை சென்ற புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தான் காயமடைந்துள்ளதை உறுதிப்படுத்தினார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
அவரது காயம் வலது காலின் மூட்டு பகுதியில் ஏற்பட்டுள்ளது. லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளிலேயே பீல்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டும் 4 நாட்கள் வரை விளையாடியதால் காயம் சற்று அதிகமாக உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் 4ஆவது மற்றும் 5ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.