சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த இந்திய அணி!
India vs England 4th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்ததன் மூலம் சார்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றி தனித்துவ சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
இதில் இந்திய அணி வீரர்கள் கேப்டன் ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சதமடித்தும், கேஎல் ராகுல் 90 ரன்களையும் சேர்த்தன் மூலம் கடைசி நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 425 ரன்களைச் சேர்த்தது. இப்போட்டியின் கடைசி நாள் இறுதிவரையிலும் முடிவு எட்டப்படாததன் காரணமாக இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இந்திய அணி சிறப்பு சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. அந்தவகையில் இந்திய அணி இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 358 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 425 ரன்களைக் குவித்தது. இதில் 1884 முதல் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் 141 ஆண்டுகளில் விளையாடிய 86 டெஸ்ட் போட்டிகளில், ஒரு அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் 350 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்த முதல் அணி எனும் சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இதுதவிர்த்து ஒரு டெஸ்ட் தொடரில் அதிக முறை ஒரு இன்னிங்ஸில் 350 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்ததன் அடிப்படையில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஏழு இன்னிங்ஸ்களில் இந்தியா அணி 350+ ரன்களை எட்டியுள்ளது. இதன்மூலம் இந்தப் பட்டியலில் இந்தியா ஆஸ்திரேலியாவை முந்தியுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் தொடர்களில் ஆறு முறை 350 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்துள்ளது.
ஒரு டெஸ்ட் தொடரில் ஒரு அணி அதிக முறை 350+ ரன்கள் எடுத்தது
- 7* - இந்தியா vs இங்கிலாந்து, 2025
- 6 - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, 1920/21
- 6 - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, 1948
- 6 - ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, 1989
Also Read: LIVE Cricket Score